யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு : தாயார் கைது
யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று (03) அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் குறித்த குழந்தை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளில் இயற்கையான மரணம் இல்லை என தெரியவந்துள்ளதுடன் குழந்தையின் கை மற்றும் கால்கள் முறிவடைந்துள்ளன.
குழந்தையின் தலையில் பாரிய காயம் உள்ளதுடன் காதிலும் காயங்கள் உள்ளன. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 33 வயதுடைய குழந்தையின் தாயார் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.