காதலியின் தந்தையுடன் சென்ற இளைஞன் விபத்தில் பலி
ஹொரணை, பொருவதன்ட பிரதேசத்தில் இன்று (01) கார் - முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் மோதி பின்னர் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் களுத்துறை, புலத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் அருணகம பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவர் என்பதுடன் இவர் உயிரிழந்த இளைஞரின் காதலியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.