
ஸ்ரீலங்காவில் சர்ச்சையை கிளப்பியுள்ள பருந்தை நீதிமன்றுக்கு கொண்டு வந்த பொலிஸ் அதிகாரிகள்
பாதாள உலக குழுவின் தலைவரான அங்கொட லொக்கா, போதைப்பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பருந்து ஒன்றும்,இதன்போது கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகளால் குறித்த பறவை நீதிமன்றிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த கழுகு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீகொடை - நாவலமுல்ல, மயான வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பருந்து நேற்று (30) கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கண்டிபிடிக்கப்பட்ட பருந்து சுமார் 15 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை தூக்கிச் செல்லக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது. இந்த இன பருந்துகளை கட்டளைகளைப் பின்பற்றக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க முடியும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பருந்தைக் கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட விடயம் தற்போது ஸ்ரீலங்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கொட லொக்கா என்பவர் இந்தியாவில் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையிலேயே இவர் வளர்த்ததாக கருதப்படும் பருந்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.