
திடீரென மாயமான இரண்டு மாணவிகள்: தீவிரமாக தேடும் காவல்துறையினர்
மத்திய மாகாணத்தில் (Central Province) கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் (GCE OL examination) தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை மாணவிகள் இதுவரை வீடுகளுக்குச் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவமானது நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரால் கினிகத்தேனை (Ginigathena) காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் நேற்று (14) காலை பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கினிகத்தேன-அக்ரோயா மற்றும் நாவலப்பிட்டி (Nawalapitiya) நாகஸ்தான பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளும் நண்பர்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு அருகில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை ஒருசில மாணவிகள் பார்த்துள்ளனர்.
மேலும் காணாமல் போன மாணவிகளின் தகவல்கள் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கினிகத்தேனை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.