
இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான விமான சேவைகள் ஜூலை 31 முதல் ஆரம்பம்!
கொரோனா தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகள் ஜூலை 31 முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன்படி, துபாயில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வகையில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் முதலாம் திகதிகளில் இரண்டு விமானங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த இரு விமானங்கள் மூலம் சுமார் 600 இலங்கையர்களை அழைத்து வரமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“அடுத்த சில விமானங்கள் மத்திய கிழக்கு நாடுகளை, குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஜோர்தான் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 50 ஆயிரம் இலங்கையர்கள் தங்களை மீளவும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரி தூதரகங்களில் பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் வேலையிழந்துள்ள மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.