ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜேர்மனியர்களுக்கு எச்சரிக்கை!

ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜேர்மனியர்களுக்கு எச்சரிக்கை!

ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

அரகோன், கட்டலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்களில், அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய நாட்களில் பிராந்தியங்களில் வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளன. ஆனால் பெரும்பாலான பிராந்தியங்களில் நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜேர்மனியின் ரோபர்ட் கோச் நிறுவனம் (RKI) நாடு முழுவதும் சமீபத்திய தொற்றுகள் அதிகரிப்பதற்கு அலட்சியமே காரணம் என கூறுகின்றது.

‘ஜேர்மனியில் புதிய வைரஸ் தொற்று பரவல், என்னை மிகவும் கவலையடையச் செய்கின்றன’ என ஜேர்மனியின் ரோபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் லோதர் வைலர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் புதிய வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 633ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் பணியிடங்கள் மற்றும் விருந்துகளிலேயே சமூக தொற்று பரவல் அதிகரிப்பதாக ரோபர்ட் கோச் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சமூக தொலைதூர விதிகளை கடைபிடிக்குமாறு மக்களுக்கு RKI அழைப்பு விடுத்துள்ளது.