தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மூன்றரை தசாப்தங்களுக்கு மேலாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக போதிய மூலதனச் செலவுகள் வழங்கப்படவில்லை எனவும் இந்த வருடத்தில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக மூலதனச் செலவுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தெற்காசிய வலயத்தின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாகக் கருதப்படும் காலி கராபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட “ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய பெண்கள் வைத்தியசாலை”யை மக்களின் பாவனைக்காக இன்று (27) காலை திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஆறு மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலை 640 படுக்கைகள், 6 அறுவை சிகிச்சை நிலையங்கள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், விசேட குழந்தை பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் பிரிவும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
2004 டிசம்பரில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து, ஹபராதுவ தல்பே பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மனியின் முன்னாள் சான்சலர் ஹெல்மட் கோல், சுனாமி அனர்த்தத்தினால் தென் மாகாணத்தில் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையான காலி மகமோதர வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தை நேரில் பார்த்துவிட்டு புதிய மகப்பேற்று வைத்தியசாலையை அமைக்க முன்வந்தார்.
வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஜெர்மன்அரசாங்கம் 25 மில்லியன் யூரோக்களை ( சுமார் 357 கோடி ரூபாய்) வழங்கியிருந்தது. வைத்தியசாலைக்கான செலவுகளில் ஒரு பகுதி நன்கொடையாகவும், மற்றைய பகுதி இலகுக் கடனாகவும் கிடைத்துள்ளது.
ஜேர்மன் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த நன்கொடைக்காக இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கு (Felix Neumann) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார்.
வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக ஆரம்பத்தில் 800 பேர்ச்சஸ் காணி ஒதுக்கப்பட்டது. பின்னர் மேலும் இரண்டு காணிகள் கையகப்படுத்தப்பட்டு தற்போது வைத்தியசாலையின் மொத்த பரப்பளவு சுமார் ஆயிரம் பேர்சஸ்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
புதிய மகப்பேறு வைத்தியசாலையை திறந்து வைத்ததன் பின்னர், நவீன சத்திர சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார்.