
இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இன்று ஆரம்பம்!
இலங்கை துவிசக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமாகவுள்ள இந்த துவிச்சக்கர வண்டி போட்டி, ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளது.
அதன் முதற்கட்டமான இன்று கொழும்பு காலி முகத்திடலில் இருந்து, கண்டி வரையிலான துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
நாளைய தினம், கண்டியிலிருந்து பொலன்னறுவை வரையிலும் நாளை மறுதினம் பொலன்னறுவையிலிருந்து திருகோணமலை வரையிலுமான துவிச்சக்கர வண்டி ஓட்டப் இடம்பெறவுள்ளது.
குறித்த துவிச்சக்கர வண்டி ஓட்ட போட்டியின் போது, 108க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கு பற்றவுள்ளனர்.
குறித்த போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் 6ஆம் திகதி திருகோணமலையிலிருந்து, வவுனியா வரையிலும், இறுதி நாளான எதிர்வரும் 7ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.