கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி; மனதை உருக்கும் முகநூல் வாசகரின் பதிவு
அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் இன்று (03.03.2024) மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்படவுள்ள நிலையில் தமிழ் தேசிய துக்க நாளாக நினைவுகூற பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தமிழ் தேசிய துக்க நாளாக நினைவுகூற பொது அமைப்புக்கள் ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் இன்றைய நாள் தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களைத் தவிர்த்து அமரர் சாந்தனிற்கு அனைவரும் திரண்டுவந்து வணக்கம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் மக்கள் வணக்கம் செலுத்த ஏதுவாக அவரது தாய் மண்ணிற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
இன்று காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படும் சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் வணக்கத்தின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்படவுள்ளது.
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த நாளான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
வவுனியா ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வணக்க நிகழ்வுகளில் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணி திரண்டு வணக்கம் செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கநாளை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.
இறுதி நினைவு வணக்கம் நாளைய தினம் (04.02.2024) வல்வெட்டித்துறை தீருவிலில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தன் அண்ணாவின் உடலை வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் தாயிடம் கொண்டு சேர்த்தார்! கதறி அழுத தாயின் துயரம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் இனவலி! சாந்தன் அண்ணாவின் உடலைத் தமிழ் நாட்டிலிருந்து எடுத்து வரக் கூடாது என அடக்கி வைத்தும் அவரோடு சிறையில் வாழ்ந்தவர்கள் உள்ளிட்ட தமிழ்த் தேசியப் போராளிகள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சில, தமிழினவுணர்வாளர்கள் சிலர் என விமானத்தில் ஏற்றமுன்பு 33 ஆண்டுகள் “இன வலி” சுமந்து போராடிய ஒரு போராளியாகப் போற்றி வீர வணக்கம் செலுத்தி மதிப்பளித்துள்ளனர்.
ஈழத்தில் “வட கிழக்கு தமிழர் தாயகம் எழுச்சியோடு சாந்தன் அண்ணாவிற்கு ‘ வீர வணக்கம் செலுத்த வேண்டும்.
என தமிழக இனவுணர்வாளர்கள் வேண்டுகின்றனர். எங்கள் இனத்திற்காக செய்யாத குற்றத்திற்கு சிறை, சித்திரவதை முகாம் என கொடிய இனவலி சுமந்து போராடிய சாந்தன் அண்ணாவிற்கு வீர வணக்கம் செலுத்தி உலகத் தமிழராக மதிப்பளிப்பது தமிழினத்தின் கடமை.
“ஆதிக்க சக்திகள் எழுத முனையும் கதைகள் வரலாறுகள் ஆகாமல் மக்கள் சக்தியின் புரட்சி வரலாறுகள் எழுதப்பட வேண்டும்.
சாந்தன் அண்ணா அரச வல்லாதிக்கத்தினால் தமிழன் என்பதற்காக வதையுண்டு பலியான அத்தனை போராளிகளினதும் ஒரு குறியீடாக உள்ளார்.
தமிழீழ மண்ணே உலகத் தமிழினமே சாந்தன் அண்ணாவிற்கு வீர வணக்கம் செலுத்தி எழுகை கொள்.
அத்தோடு இதர மூன்று அப்பாவித் தமிழரை அவர்களும் கொல்லப்படமுன் விடுதலை செய்யப்பட உறுதியாகக் குரல் கொடுத்துப் போராடுவோம்.
சாந்தன் அண்ணா இன வலி சுமந்து 33 ஆண்டுகள் போராடிய ஒரு மக்கள் போராளி. அவரது சாவும் களச் சாவே. என்றவாறு முகநூல்வாசி ஒருவர் தனது உள்ளுணர்வைப் பகிர்ந்துள்ளார்.