பங்களாதேஷில் வெள்ளப்பெருக்கு – நிலைமைகள் மோசமடைவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

பங்களாதேஷில் வெள்ளப்பெருக்கு – நிலைமைகள் மோசமடைவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

பங்களாதேஷின் வடக்குப் பகுதிளில் சுமார் ஒரு மாத காலமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நாட்டில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதிலிருந்து நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் கடந்த 25 நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் சுமார் 9,500 பேர் நீரினால் பரவும் நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

பங்களாதேஷில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படுவதால் நிலைமைகள் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மதிப்பிட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், சுமார் 1.3 மில்லியன் சிறுவர்கள் உட்பட 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 550,000 குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளின் எண்ணிக்கை பங்களாதேஷில் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது நாடு முழுவதும் மொத்தமாக 2 இலட்சத்து 21 ஆயிரத்து 178 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2,874 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பங்களாதேஷ் இதுவரை கொரோனா தொற்றினை கண்டறிய 1.1 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகளை நடத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்