
யாழ் மக்களுக்கு தரமற்ற சீனி: உடன் நடவடிக்கை எடுத்த அமைச்சர்.
வடமாகாண கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட 80 ஆயிரம் கிலோ சீனியில் காணப்பட்ட 30 ஆயிரம் கிலோ தரமற்ற சீனி திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"சீனியின் விளையாதிகரிப்பைத் தொடர்ந்து 320 ரூபாவிற்கு சீனி விற்பனையானமையால் சீனிக்கு பெரும் தட்டுப்பாடு உண்டான நிலையில் 100 மெற்றிக் தொன் சீனியை வடமாகாண மக்களிற்கு வழங்குவதாக கடற்தொழில் அமைச்சரிற்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் கிடைக்கும் சீனியை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 280 ரூபாவிற்கு மக்களிற்கு வழங்கவும் அமைச்சர் தலைமையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் வடக்கிற்கு குறித்த நிறுவனமொன்றில் இருந்து 80 ஆயிரம் கிலோ சீனி அனுப்பி வைக்கப்பட்டது.
அது தரப்பரிசோதனைக்குற்படுத்தப்பட்ட போது அதில் தரமற்ற சீனியாக 30 ஆயிரம் கிலோ சீனி இருப்பது கண்டறியப்பட்டு அதனை மீள அந்த நிறுவனத்திற்கே அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களிற்கு தரமான பொருட்கள் மாத்திரமே வழங்கப்படும், கூட்டுறவு சங்கத்தினர் தரமற்ற சீனியை திருப்பி அனுப்பியது நல்ல விடயமாகும்.
இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட நிறுவத்துடன் பேசி, திருப்பி அனுப்பப்பட்ட சீனிக்கு பதிலாக தரமான சீனி மீளப் பெறப்படும், தரமற்ற பொருட்களை அனுப்பும் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாது, மக்களுக்கு தரமான சீனி கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வரும் நிலையில், மேலும் ஒரு தொகை சீனியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது,
மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து செயற்பட்ட கூட்டுறவுச் சங்கத்தினரை பாராட்டுவதாகவும்" அவர் தெரிவித்தார்.