நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தபடி கார் ஓட்டும் புகைப்படம் ஒன்றும், மகள் சவுந்தர்யா மற்றும் மருமகன், பேரன் உடன் இருக்கும் மற்றொரு புகைப்படமும் சமூகவலைதளத்தில் வெளியானது.
இதையடுத்து ஊரடங்கு காலகட்டத்தில் இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு ரஜினி சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றாரா என ஆய்வு செய்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே நேற்று கேளம்பாக்கம் செல்வதற்காக ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றதாக தகவல் வெளியானது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகமோ, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமோ இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு ரஜினிகாந்த் காரில் சென்றபோது அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளதாக ரசீது ஒன்று கிடைத்துள்ளது.
அதில், ரஜினிகாந்த் சென்ற வாகனத்தின் எண், விதிமீறியதாக அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களும், வி.என்.பழனி என்ற போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாத விதி மீறலுக்காக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அபராத தொகையை 23.7.2020 அன்று செலுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது