இந்திய புலனாய்வு அமைப்பின் உளவாளியா குண்டுதாரி சாரா?- ஜனாதிபதி ஆணைக்குழு தகவல்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களின் தற்கொலை குண்டுதாரிகளின் ஒருவரான சாரா ஜெஸ்மின் என்று அழைக்கப்படும் புலத்ஸ்சினி இராஜேந்திரன், இந்திய புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்டாரென தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அரசபுலனாய்வு பிரிவின் அதிகாரியொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,“தொடர் குண்டுத் தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது தொடர்பாக முன்கூட்டியே கட்டுவாப்பிட்டிய தற்கொலை குண்டுதாரியின் மனைவி சாரா ஜெஸ்மின், இந்திய புலனாய்வு அமைப்பிற்கு தெரிவித்ததாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவ்விடயம் குறித்து அரச புலனாய்வு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கிய விடயங்களை சஹ்ரானின் குழுவிற்குள் இருந்து இந்திய புலனாய்வு அமைப்பு பெற்றுள்ளது.
இதன்காரணமாகவே இந்தியாவினால் முன்கூட்டியே எச்சரிப்பதற்கு முடிந்ததுள்ளது.
இதேவேளை சாரா உயிரிழந்து விட்டதாக ஆரம்பத்தில் கருதப்பட்டபோதிலும், அவர் இந்தியாவுக்கு கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என பொலிஸார் கூறினர்” என புலனாய்வு பிரிவின் அதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.