
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம்.
கொழும்பு - கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில், ஓடிக்கொண்டிருந்த பஸ்மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். குறித்த பஸ் வெள்ளவத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பஸ்ஸுக்குள் மேலும் இருவர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.