வடக்கில் விடுவிக்கப்படவுள்ள தமிழ் மக்களின் காணிகள்..!
வடமாகாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் சில விடுவிக்கப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் முழுமையான நிலப்பகுதி 253,283 ஏக்கர்களாக காணப்படுவதோடு, 2009 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையினரால் 26,812 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டிருந்ததாக அதிபர் குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் 92வீதமான காணிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதற்கமைய 817 ஏக்கர் அரச காணி, 22,101 தனியார் காணி உள்ளடங்கலாக 22,919 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.அத்துடன் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினரால் 3754 ஏக்கர் காணிகளே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் சிறி லங்கா இராணுவம் மற்றும் கடற்படையினரால் அடையாளம் காணப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் 1.4 ஏக்கர், கிளிநொச்சியில் 13 ஏக்கர் மற்றும் முல்லைத்தீவில் 20 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் 6 மாதங்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பில் இராணுவத்தினால் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் பலாலி இராணுவ முகாமில் இருந்து சுமார் 290 ஏக்கர் காணி விவசாயம் மற்றும் பருவகால பயிர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.