அதிக நேரம் கேம் விளையாடியதாலேயே கொழும்பு தமிழ் இளைஞன் இறந்தார்: மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

அதிக நேரம் கேம் விளையாடியதாலேயே கொழும்பு தமிழ் இளைஞன் இறந்தார்: மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

கடந்த சில நாட்களின் முன்னர் கொழும்பில் வசித்த தமிழ் இளைஞன் ஒருவர் அதிக நேரம் தொலைபேசியில் கேம் விளையாடியதால் கொழும்பு 13, கினரஸ்தி பெரேரா மவத்தையில் வசிக்கும் ஜெயராமன் சுரேந்திரன் (32) என்பர் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் மூளை நரம்பு வெடித்தே அவர் உயிரிழந்தார் என்பது மரண விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொழும்பு மாநகரசபை கூடதல் மரணவிசாரணை அதிகாரி ஈரேஷா தேஷனி சமரவீர முன்னிலையில் மரண விசாரணை நடைபெற்றது.

இது குறித்த அறிக்கையை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் , கைத்தொலைபேசியில் தொடர்ந்து கேம் விளையாடியதாலேயே இந்த மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தன் தர்ஷிகா (32) அளித்த வாக்குமூலத்தில்,

“எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கணவருக்கு முன்பு இரைப்பை குடல் அழற்சி இருந்தது. அவருக்கு வேறு நோய் இல்லை. இதற்கிடையில், அவர் இரவில் தொலைபேசியில் கேம் விளையாடுவது வழக்கம். தொடர்ந்து கேம் விளையாடக்கூடாது என அவரிடம் கூறினாலும், அவர் அதை கேட்காமல் தொடர்ந்து விளையாடினார்.

நான் அன்று குழந்தைகளுடன் தூங்கினேன். அதிகாலை 2.00 மணியளவில் அவர் குளியலறையில் இருப்பது போல் உணர்ந்தேன். ஆனால் அதிகாலை 2.30 மணியளவில் திரும்பிப் பார்த்தபோதும் அவர் படுக்கையில் இல்லை. அதனால் நான் குளியலறையின் கதவைத் திறந்தேன். அவர் தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டேன். நாங்கள் அவரை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறினார்.

இந்நிலையில் “மருத்துவ அறிக்கையின்படி, மூளையில் நரம்பு சிதைந்து மூளையில் இரத்தப்போக்கு காரணமாக மரணம் நிகழ்ந்திருந்தது. தொடர்ந்து கேம் விளையாடியது, உடலின் இரத்த அழுத்தத்தை பாதித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாமென தடயவியல் நோயியல் நிபுணரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இளைய தலைமுறையினரில் பலர் கைத்தொலைபேசியில் மூழ்கியிருப்பதன் ஆபத்தையும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் லொக் டவுன் காலத்திலும், விடுமுறையிலும் வீட்டு முற்றத்திற்கே வராமல் கைத்தொலைபேசியுடன் பிள்ளைகள் உட்கார்ந்திருப்பதன் ஆபத்தை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டுமென வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.