நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை விரைவில் ஆரம்பம்
ETI பினான்ஸ் லிமிட்டட் நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் ஃபினான்ஷியல் சேர்விசஸ் பி.எல்.சீ நிதி நிறுவனம் ஆகியவற்றின் வாடிக்கையாளர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
மத்தியவங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETI பினான்ஸ் லிமிட்டட் நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் ஃபினான்ஷியல் சேர்விசஸ் பி.எல்.சீ நிதி நிறுவனம் ஆகியவற்றின் வர்த்தக நடவடிக்கைகளுக்கான உரிமம் கடந்த 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மத்திய வங்கியினால் இரத்துச் செய்யப்பட்டது.
இதனை அடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் குறித்த நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, ETI பினான்ஸ் லிமிட்டட் நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் ஃபினான்ஷியல் சேர்விசஸ் பி.எல்.சீ நிதி நிறுவனம் ஆகியவற்றின் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும், அதிக பட்சமாக 6 இலட்ச ரூபா வரையில் நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் 45 கிளைகளின் ஊடாக குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், குறித்த நிதி நிறுவன வாடிக்கையாளர்கள், உரிய ஆவணங்களை குறித்த மக்கள் வங்கி கிளைகளில் சமர்ப்பித்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில், மக்கள் வங்கியின் 0112 481 594, 0112 481 320, 0112 481 617 மற்றும் 0112 481 703 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம், அல்லது இலங்கை மத்திய வங்கியின், 0112 398 788 மற்றும் 0112 477 261 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.