இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு!

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிருவாகச் செயலாளர் குமாரசாமி அருணாசலம் ஊடகங்களுக்கு  அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “2020 ஆகஸ்ட் 05ஆம்; திகதி  நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இலங்கை; தமிழர் ஆசிரியர் சங்கம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாகத் தீர்மானித்துள்ளது.

சங்க உறுப்பினர்கள் தேர்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமது சங்கத்தின் தற்கோதைய தலைவர் இரா. சச்சிதானந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதுடன் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் சங்கத்தின் ஆலோசகருமான த. மகாசிவத்தின் பெயர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணத்தில் 20 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் செயற்பட வேண்டும் என அந்த  அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.