குடும்ப தகராறில் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொலை - யாழில் சம்பவம்..!
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(10) நள்ளிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்மீது கத்திக் குத்து தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
பண்டத்தரிப்பு - பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜ்குமார் (வயது 35) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து இருவரை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.