நுவரெலியா மாவட்ட பாடசாலைகளின் குறைபாடுகளை தீர்க்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்
நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து, அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்புகளின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு, நுவரெலியா அல்லது அதனை அண்மித்த மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் பணித்தார்.
அத்துடன், பாடசாலைகளில் விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பில் நிலவும் குறைபாடுகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை, நோர்வூட் நகரத்துக்கு பிரதேச செயலாளர் அலுவலகமொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சீ.பி. ரத்னாயக்கவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.