தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு - 3ம் கட்ட போராட்டம் ஆரம்பம்..!

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு - 3ம் கட்ட போராட்டம் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாம் கட்ட போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையை அகற்றுமாறு கோரி ஏற்கனவே இரண்டு கட்டமாக, போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட போராட்டமாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு கோரி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையில் 2 கட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த விகாரை பொதுமக்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரி இந்த போராட்டம் இடம்பெற்று வந்திருந்தது போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தினர் குழப்பும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்ததுடன் கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நிறைவுக்கு வந்திருந்தது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் சனிக்கழமை பௌத்தர்களின் விசேட பண்டிகைகளில் ஒன்றான பொசன் தினம் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் எதிர்ப்பு போராட்டத்தை மீண்டும் மூன்றாம் கட்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆரம்பித்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பளத்த விகாரை அமைப்பு சட்டவிரோதமானது என தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கான நீதி இன்றுவரை கிடைக்கவில்லை.

தமிழர் தாயக பௌத்தமயமாக்கலின் ஒருபகுதியாக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட செயற்பாட்டிற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் பின்னியில் தையிட்டி போராட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்மை குறிப்பிடதக்கது.