பௌத்த விகாரைக்கு துணை போகிறதா தமிழர் பகுதி பிரதேச செயலகம்...!
முல்லைத்தீவு - மாங்குளம் நகரில் சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட விகாரைக்கு யாத்திரிகர் மடம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த மடத்திற்கான காணியை வழங்க ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் துணைபோவதாக பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
மாங்குளம் நகரில் ஏ9 வீதியருகே 2012 ஆம் ஆண்டு இராணுவத்தினால் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விகாரைக்கு யாத்திரிகர் மடம் அமைக்கும் வகையில் அதற்கான காணியை வழங்குவதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு சொந்தமான வெற்றுக்காணியில் பௌத்த விகாரைக்கு யாத்திரிகர் மடம் கட்டுவதற்காக வழங்கும் வகையில், பிரதேச செயலக காணி பயன்பாட்டுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த காணி விடயம் தொடர்பில், காணி பயன்பாட்டுக் குழுவினால் பொது அமைப்புக்களுக்கு தெரியப்படுத்தாமல், தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்திச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிராமத்தின் பொதுத் தேவைகளுக்கு காணித் தேவை காணப்படுகின்ற நிலையில், இந்த நடவடிக்கை குறித்து பொது அமைப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடிதத்தின் பிரதிகள் முல்லைத்தீவு காணி பயன்பாட்டுக்குழுவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அபிவிருத்தி சங்கம் கூறியுள்ளது.