
முட்டி மோதிய அமைச்சர் டக்ளஸ் மற்றும் சிறீதரன் எம்.பி!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான டக்கிளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
இக் கூட்டத்தில்பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ம, செல்வராஜா கஜேந்திரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிடவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதேசமயம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 2000 ஏக்கர் காணியினை வன வள திணைக்களம் கையகப்படுத்துவதற்கான முயற்சியை எடுப்பதாக அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டதாகவும், அந்த செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.
அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், யாழில் மட்டுமல்ல மகாவலி வலயம் எனும் பெயரில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரியாமல் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் அபகரிக்கப்படும் செயல்பாடு தமிழர் தாயகம் முழுவதும் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதேசமயம், அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடனான சந்திப்பின் பொது, அவருக்கே தெரியாமல் இடம்பெற்றுள்ள பல காணி அபகரிப்புக்கள் தொடர்பிலும் தெரிய வந்துள்ளதாக சிறீதரன் மேலும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் டக்ளஸ், காணி அபகரிப்புக்களில் தவறுகள் நடந்திருக்கலாம் எனவும், தையிட்டிலும் நடந்தது தவறுதான் எனவும் தெரிவித்தார்.
அதேசமயத்தில், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை அமைச்சர் டக்ளஸ் அபகரித்துள்ளதாக தெரிவித்த விடயத்திற்கு, சரியான ஆதாரத்தினை வழங்குமாறு அமைச்சர் கேட்டுள்ளார்.
அதற்கு நடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், குறித்த காணி அபகரிப்பிற்குறிய ஆதாரங்கள் அனைத்தும் அதிபருக்கு சபர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இவ்வாறு, மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றிருந்தது.