
தமிழர் பகுதியில் அழிக்கப்பட்டுள்ள 125 ஏக்கர் காணி - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு, சுந்தரபுரம் பகுதியில் 125 ஏக்கர் வன ஒதுக்குக் காடு தனிநபர்களால் பூரணமாக அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப்பகுதி முற்றாக அழிக்கப்பட்டு துப்பரவு பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன், வனவள அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காட்டுப்பகுதியினை அண்டியுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
"காணி அற்ற நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் குறித்த கிராமத்தில் வசித்து வருகின்றார்கள்.
வாழ்வாதாரத்துக்காக பற்றைக் காடுகளைத் துப்புரவு செய்து உழுந்து விதைத்தாலே உடனடியாக வனவள அதிகாரிகள் கைது செய்து எம்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தண்டனை வாங்கி தருவார்கள்.
இதற்கு வனவள அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை எமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துகிறது.
அத்துடன் குறித்த பகுதி ஒதுக்குக்காடு என்பதனால் இதனைத் துப்புரவு செய்வதற்கு சிறிலங்கா அதிபர், அமைச்சரவை, காணி ஆணையாளர், காணி அமைச்சர் ஆகியோரின் அனுமதி கட்டாயம் தேவையான ஒன்றாகும். இவை எவையுமின்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் காணப்பட்ட மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபனிடம் மக்கள் தெரியப்படுத்தியதையடுத்து, அதிபரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்று தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்." இவ்வாறு அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.