
யாழ் மோசடி செய்த வியாபார நிறுவனம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
யாழில். குளிர்பான போத்தல்களின் காலாவதி திகதியில் மாற்றம் செய்த விநியோகஸ்தருக்கு 110,000/= தண்டத்துடன் வியாபார அனுமதியை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்தமாதம் 26.04.2023 அன்று யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு, காலாவதி திகதியில் மாற்றம் செய்து குளிர்பான போத்தல்கள் யாழ். நகர் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து யாழ். நகர் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்து மற்றும் காலாவதியான குளிர்பான போத்தல்கள் விநியோகிக்கப்பட்டமை தெரியவந்தது.
இதனையடுத்து 2 கடைகளுக்கு விநியோகிக்கப்பட்ட குளிர்பான போத்தல்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த விநியோகஸ்தரின் களஞ்சியசாலையை முற்றுகையிட்டு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்த 1100 குளிர்பான போத்தல்கள் விநியோகத்திற்காக தயார் நிலையில் இருந்த போது கைப்பற்றப்பட்டதுடன், காலாவதியான குளிர்பான போத்தல்கள் என மொத்தம் 1710 மனித பாவனைக்கு உதவாத குளிர்பான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து குறித்த விநியோகஸ்தருக்கு எதிராக யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் கடைகளுக்கு விநியோகம் செய்தமை தொடர்பில் 02 வழக்குகளும், பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபனால் களஞ்சியசாலை குறைபாடுகளுக்காக ஒரு வழக்கும் என 03 வழக்குகள் இன்றையதினம் 24.05.2023 மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து 03 வழக்குகளுக்கும் குறித்த விநியோகஸ்தரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 110,000/= தண்டம் விதிக்கப்பட்டது.
அத்துடன் யாழ். மாநகர சபையால் குறித்த விநியோகஸ்தரிற்கு வழங்கப்பட்ட வியாபார அனுமதியை இரத்து செய்வதற்குரிய பரிந்துரையினை, 03 வழக்குகளிற்கும் தனித்தனியே யாழ். மாநகர சபை ஆணையாளரிற்கு வழங்கி நீதிமன்றால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.