சிறிலங்கா இராணுவத்தில் பணிபுரியும் தமிழ் பெண்கள் வீதிக்கிறங்கி போராட்டம்…!

சிறிலங்கா இராணுவத்தில் பணிபுரியும் தமிழ் பெண்கள் வீதிக்கிறங்கி போராட்டம்…!

முல்லைத்தீவு - கொக்காவில் இராணுவ முகாமில் பணிபுரியும் தமிழ் பெண்கள் தற்போது வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.

கொக்காவில் இராணுவ முகாமில் இருந்து வவுனியா இராணுவ முகாமுக்கு செல்லும் படியாக அறிவித்தல் கிடைத்துள்ள நிலையில், அங்கு தம்மால் செல்ல முடியாதெனத் தெரிவித்தே இப்போராட்டம் இடம்பெறுகிறது.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில், 

“நாங்கள் தமிழ் பிள்ளைகள். மொத்தமாக 104 பேர் இருக்கின்றோம். 2012 இல் இருந்து இந்த முகாமில் தான் நாங்கள் கடமை புரிகிறோம். 

எங்களை வேலைக்கு எடுக்கும்போது கிளிநொச்சியில் தான் வேலை என்று எடுத்தார்கள். ஆரம்பத்தில் எங்களை வேலை கிடைக்கும் போது ஆமி வேலை என்று சொல்லவும் இல்லை.

நாங்கள் வந்து விட்டோம் என்பதற்காகவே இவ்வளவு காலமும் வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய சேவை காலமும் நெருங்கி விட்டது. ஆனால் இன்று திடீரென்று எங்களை வவுனியா செல்லும்படி சொல்கிறார்கள்.

கஷ்ட நிலைமையில் தான் நாங்கள் இந்த வேலைக்கு வந்தோம். ஆனால் வவுனியாவுக்கு செல்வதற்கு குடும்ப சூழலும் பொருளாதார நிலைமையும் இடம்கொடுக்காது. 

இது தொடர்பில் பல முறை பேசியும் எந்த விதமான பதில்களும் கிடைக்கவில்லை. எங்களை ஆண்கள் தங்கும் இராணுவ முகாமுக்கே அனுப்புகிறார்கள்.

உங்களால் இந்த முகாமை விட்டு வேறு எந்த இடங்களுக்கும் செல்ல முடியாது” என்றனர்.