பிளாஸ்டிக் கவரால் பங்களாவை மூடிய ஷாருக்கான்
கொரோனா தொற்று பரவலை தடுக்க நடிகர் ஷாருக்கான் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. நடிகர் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யா ஆகியோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், திரையுலகமும் கொரோனா அச்சத்தில் மூழ்கியுள்ளது. நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே தனது 5 மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், ஷாருக்கான் குடும்பத்தினருடன் வசிக்கும் சொகுசு பங்களா, பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.