யாழில் இரகசிய பௌத்த நிகழ்வு - கச்சதீவிலிருந்து காங்கேசன்துறைக்கு குடிபெயர்ந்தாரா புத்தர்...!

யாழில் இரகசிய பௌத்த நிகழ்வு - கச்சதீவிலிருந்து காங்கேசன்துறைக்கு குடிபெயர்ந்தாரா புத்தர்...!

யாழில் மற்றும் ஒரு புத்தர் கோயிலுக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெறும் இந்த நிகழ்விற்கு பெருமளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த விகாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விகாரையிலேயே இன்று கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது. தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா அரசாங்கம் புத்தர் கோயில்களை அமைத்து தமிழரின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி, தமிழரின் இருப்பை முற்றுமுழுதாக இல்லாது செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்த வகையில்,  வடதாயகமான யாழின் நாவற்குழிப் பகுதியில் அண்மையில் ஒரு புத்தர் கோயில் அமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

அந்த நிகழ்விற்கு சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வா தலைமைதாங்கியதோடு, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகளும் கலந்து கொண்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதற்கு மக்களும் அரசியல் தலைவர்களும் பல்வேறு வகையில் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் அதனை பொருட்படுத்தாது தமது பூசை வழிபாடுகளை சிறப்பாகவே நடத்தி முடித்திருந்தனர்.

அதேபோன்றதொரு கலசம் வைக்கும் நிகழ்வே இன்றைய தினம் தையிட்டிப் பகுதியிலும் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் எந்த வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுக்கும் தமிழர் அழிப்பு நடவடிக்கைகள் முற்றுப் புள்ளியின்றி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இதேவேளை கச்சதீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை குறித்த இடத்திலிருந்து அகற்றி விட்டதாக சிறிலங்கா கடற்படை நேற்றைய தினம் யாழ். ஆயர் இல்லத்திற்கு அறிவித்திருந்தது.

ஆகவே நேற்றைய தினம் கச்சதீவிலிருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலை இன்று யாழில் பிரதிட்டை செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில், சிறிலங்கா படையினரால் கையகப்பபடுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி பிரதிட்டை செய்யும் செயற்பாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இடம்பெறுகின்றன.

அதேபோன்றே தையிட்டிப் பகுதியிலும் நரசிம்ம வைரவர் கோயிலைப் பௌத்த கோயிலாக மாற்றி, பாரியளவிலான கட்டடம் அமைத்து அதற்கு இன்று கலசம் வைக்கும் நிகழ்வும் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.