
இரகசியத் தகவலையடுத்து யாழ் நகரில் திடீர் சோதனை - வசமாக சிக்கிய நபர்...!
யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ் நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்தே இன்றைய தினம் இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த திடீர் நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் நகர்ப் பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதியான சோடா போத்தல்களில், காலாவதி திகதியில் மாற்றம் செய்து, சோடாப் போத்தல்கள், ஓர் விநியோகஸ்தரினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, யாழ்நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
அதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் யாழ்.நகர கடைகளில் எழுமாறாக பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன் போது காலாவதியான சோடாப் போத்தல்களில், காலாவதி திகதியில் மாற்றம் செய்தும், காலாவதி திகதியை அழித்தும் சோடாப் போத்தல்கள் கடைகளிற்கு விநியோகம் செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனைதொடர்ந்து பிறவுன் வீதியில் உள்ள விநியோகஸ்தரின் களஞ்சியசாலை யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது காலாவதி திகதி அழிக்கப்பட்ட நிலையில் 1110 சோடாப் போத்தல்களும், காலாவதியான திகதியுடன் 600 சோடாப் போத்தல்களும் என மொத்தம் 1710 சோடாப் போத்தல்கள், கடைகளிற்கு விநியோகம் செய்வதற்கு தயார் நிலையில் இருந்த போது பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து, குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.