
வீட்டில் தந்தையின் சடலம்.. தந்தை உயிரிழந்த போதும் உறுதியுடன் சென்று பரீட்சை எழுதிய விழுப்புரம் மாணவி!
விழுப்புரம் அடுத்து திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்த போதும் மனம் தளராமல் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி. மாணவியின் உறுதியை கண்டு நெகிழ்ந்த பொதுமக்கள்.
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் முருகதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மூன்றாவது மகளான திலகா அருகே உள்ள டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தந்தையின் இழப்பின் மூலம் துவண்டு போன நிலையிலும், நன்றாக படிக்க வேண்டும் என்று தந்தை கூறிய சொல்லிற்காக அவரின் மறைவிலும் மனம் தளராது உறுதியுடன் தேர்வு எழுத வந்தார் மாணவி திலகா. மாணவியை உறவினர்கள் கட்டித்தழுவி அழுது தேர்வினை நன்றாக எழுத வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.