தமிழ்நாட்டில் மீண்டும் லாக்டவுன் வருமா?

தமிழ்நாட்டில் மீண்டும் லாக்டவுன் வருமா? கொரோனா அதிகரிப்பு குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடு முழுவதும் ஓரே நாளில் 6050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு குறித்து நாடு முழுவதும் மாதிரி ஒத்திகை நிகழ்வு நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களில் 2% ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

விமான நிலையங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும், க்ளஸ்டர் பாதிப்பு இப்போது இல்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், தமிழகத்தில் போதிய அளவில் ஆக்சிஜன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விக்கு அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என பதிலளித்துள்ளார்.