உயர்தர பரீட்சைகள் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து முக்கிய தீர்மானம் இன்று..!
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தப்படும் தினம் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த சனிக்கிழமை கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ள மேலதிக விடுமுறை காலம் மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த வாரத்தில் 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
ஏனைய தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் வரும் முதலாவது திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதேநேரம், ராஜாங்கனை மற்றும் வெலிக்கந்தை கல்வி வலயத்தில் உள்ள எந்தவொரு பாடசாலையும் ஒக்ஸ்ட் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டு கடந்த 13 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் முன்னதாக மீள திறக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.