முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வயதில் தலைமறைவான காதல் ஜோடி.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.. 50 வயதில் தலைமறைவான காதல் ஜோடி.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது அவ்வப்போது நடக்கும் என்பதும் இந்த சந்திப்பின்போது முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. விஜய் சேதுபதி த்ரிஷா நடித்த ’96’ படத்தில் கூட இது மாதிரியான சந்திப்பு குறித்த காட்சிகள் கவிதை வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் 50 வயதை கடந்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடந்த நிலையில் சிறுவயதில் காதலித்த ஜோடி திடீரென பழைய நினைவு வந்ததால் தலைமறைவாகி உள்ளதால் இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் 35 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பின்போது 50 வயதை தாண்டிய காதல் ஜோடி தாங்கள் சிறுவயதில் காதலித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு திடீரென அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தலைமறை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இரண்டு தரப்பு குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த சந்திப்பின்போது எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு முன்னாள் மாணவரும் இடுக்கி பகுதியில் சேர்ந்த முன்னாள் மாணவியும் பங்கேற்றதாகவும் இருவரும் டீன் ஏஜில் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் படிப்பு முடிந்த பிறகு பெற்றோர் விருப்பப்படி இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து பிரிந்து விட்டதை அடுத்து இருவருக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று தெரிகிறது.

இருவரும் அவரவர் குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பின்போது மீண்டும் அவர்களுக்கு 35 ஆண்டுகளுக்கு முந்தைய டீன் ஏஜ் காதல் ஞாபகம் வந்ததாகவும் இதனை அடுத்து இருவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிகிறது. கணவரை காணவில்லை என்று மனைவியும் மனைவியை காணவில்லை என்று கணவரும் புகார் கொடுத்துள்ள நிலையில் போலீசார் அதிர்ச்சியுடன் இந்த காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.