ஃபேஸ்புக் மூலம் வீசிய காதல் வலை: இளைஞரிடம் ஏமாந்த 28 வயது திருமணமான பெண்!
ஃபேஸ்புக் மூலம் பேசிய காதல் வலையில் விழுந்த திருமணமான 28 வயது பெண் ஒருவர், 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பேஷன் டிசைன் தொழில் செய்து வரும் இந்த பெண்ணுக்கு சமீபத்தில் பேஸ்புக் மூலம் லோகேஷ் குமார் என்பவர் பழக்கமானார். அந்தப் பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட லோகேஷ் குமார் அவருக்கு காதல் வலை வீசியுள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தையும் காட்டி உள்ளார். இதனை அடுத்து காதலில் விழுந்த அந்த பெண் அந்த இளைஞனுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தனிமையில் ஒரு நாள் இருவரும் இருந்த போது அந்த பெண்ணை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக லோகேஷ் குமார் படம் எடுத்ததாக தெரிகிறது. அதன் பின் தன்னுடைய தொழிலை விரிவு செய்ய வேண்டும் என்று லோகேஷ் குமார் பணம் கேட்டதால் தன்னுடைய 30 சவரன் நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்தை அந்த பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் லோகேஷ்குமாரின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.
திருமணம் குறித்து பேச்சு எடுத்தாலே லோகேஷ் அதைத் தவிர்த்து வந்ததை அடுத்து சந்தேகம் அடைந்த அந்த பெண் அவருடைய வீட்டில் சென்று நியாயம் கேட்டபோது அவரது குடும்பத்தார்கள் அந்த பெண்ணை அடித்து மிரட்டியதோடு தங்களிடமுள்ள ஆபாச படத்தையும் சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் லோகேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பேஸ்புக் மூலம் வீசிய காதல் வலையில் விழுந்து 30 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்ச ரூபாய் பணமும் இழந்த நடுத்தர வயது பெண் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.