தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டவர்களுக்கு விளக்கமறியல்

கச்சத்தீவில் வைத்து தங்க நகையை களவாடிய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

கச்சதீவு திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண் பக்தர் ஒருவருடைய சுமார் 8 பவுண் தங்க சங்கிலி ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் குறித்த திருவிழாவில், கலந்துக்கொண்ட மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரினது தங்கச் சங்கிலியும் களவாடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சந்தேகநபர் நெடுந்தீவு காவல்துறையினரால், நேற்றைய தினம் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து, சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான், குறித்த சம்பவத்தில் தப்பி சென்றதாக கூறப்படும் பெண் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.