திருமண நாளை மறந்த கணவன்.. ஆட்களுடன் வந்து அடித்து உதைத்த மனைவி!!

திருமண நாளை மறந்த கணவன்.. ஆட்களுடன் வந்து அடித்து உதைத்த மனைவி!!

மும்பையில் திருமண நாளை மறந்ததால் பெற்றோரை அழைத்து வந்து கணவனை தாக்கிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையின் காட்கோபரில் வசித்து வரும் தம்பதிகள் விஷால் நங்ரே (32) மற்றும் கல்பனா. இவர்களுக்கு கடந்த 2018 இல் திருமணம் நடந்துள்ளது.


 

விஷால் நங்ரே கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கல்பனா ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி கல்யாண நாள் வந்துள்ளது. ஆனால், அந்த நாளை விஷால் நங்ரே மறந்துள்ளார்.


 

 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வழக்கமான சண்டைதான் என்று கணவன் விஷால் நங்ரேவும் மனைவியை சமாதானப்படுத்தியுள்ளார்.

 

ஆனால், பிரச்சினை அதோடு முடியவில்லை. அடுத்த நாள் மாலை நாங்ரே தனது வீட்டிற்கு அருகில் தனது வாகனத்தை கழுவிக் கொண்டிருந்தபோது, கல்பனா வேலை முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

ஆவேசமாக காணப்பட்ட மனைவி விஷால் நங்க்ரேவை பார்த்து, ‘இனி உன்னுடன் வாழ விரும்பவில்லை’ என்று கூறி கணவனின் தலையில் இடியை இறக்கியுள்ளார். ‘ஒரு சாதாரண விஷயத்துக்கு விவாகரத்து வரை இவள் பேசுகிறாளே என்று விஷால் நங்ரே அதிர்ச்சியாக, கல்பனா விஷால் நங்ரேவின் தாயையும் கண்டபடி திட்டி தீர்த்துள்ளார்.

 

இது விஷால் நங்ரேவுக்கு கோபத்தை கிளப்பியது. இருவருக்குள்ளும் கடுமையான வார்த்தை போர் வெடித்தது. இதனை அடுத்து கல்பனா இரவு 9:30 மணியளவில் தனது பெற்றோரையும், சகோதரரையும் அழைத்து வந்து கணவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ஏற்பட்ட மோதலில், கல்பனா தனது வீட்டாருடன் சேர்ந்து விஷால் நங்ரேவையும், அவரது தாயையும் சரமாரியாக அடித்தது மட்டுமல்லாமல், கடித்தும் வைத்துள்ளார். இதில் படுகாயடைந்த இருவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு பின்னர் காட்கோபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் கல்பனா, அவரது சகோதரர் மற்றும் அவரது பெற்றோர் மீது பிரிவு 323, 324, 327, 504 மற்றும் 506இன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை விசாரணைக்கு ஆஜராக கூறி நோட்டீசும் அனுப்பியுள்ளனர். விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளனர்.