யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட தொழில் கோரும் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தொழில் கோரும்  பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முறை குறித்த யோசனைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
 
பொருத்தமான பட்டதாரிகளை பொருத்தமான ஆசிரியர் நியமனங்களுக்கு உள்வாங்க வேண்டும்.
 
35 வயதுக்கு உட்பட்டவர்களை ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்க வேண்டும்.
 
ஓய்வூதியத்திற்கு உரிய வயதினை அண்ணளவாக குறைத்தல் வேண்டும்
 
தகுதிவாய்ந்த ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொண்டதன் பின்னர், பாடங்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் இடத்தில் தகுதிவாய்ந்த பட்டதாரிகளை பாட ரீதியாக வெளியிலிருந்து இணைத்துக்கொள்ள வேண்டும்.
 
யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவிருக்கும் இந்திய நிதி திட்டத்தில் உருவான கலாசார மண்டபத்துக்கான பணியாளர்களாக, தகுதியான பட்டதாரிகளை உள்வாங்க வேண்டும்.
 
யாழ்ப்பாணத்தில் உருவாகும் நகரசபை மண்டபத்துக்கும் உரிய பட்டதாரிகளையே சேர்க்கவேண்டும்.
 
காங்கேசன்துறையில் உருவாகவிருக்கும் இந்திய - இலங்கை கடல்வளி வர்த்தக மையத்தின் முக்கியமான பணிக்கு தகுதியான பட்டதாரிகளையே சேர்க்க வேண்டும்.
 
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் மூலம், தங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கமுடியுமென எதிர்பார்ப்பதாக யாழ்ப்பாண மாவட்ட தொழில் கோரும்  பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.