60 வயதுக்கு மேல் சேவையாற்ற முடியாது!
அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கமைய, அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை நிறைவு பெற்றவுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று இந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதை எட்டிய பின்னரோ அல்லது அதற்குப் பின்னரோ அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெறலாம்.
மேலும், ஓய்வுபெறும் உத்தியோகத்தருக்கு மாற்றீடாக ஒருவர் இல்லாத சந்தர்ப்பங்களில் அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு வருடத்திற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஓய்வூதியச் சட்டத்தின் 17ஆவது சரத்து முற்றாக நீக்கப்பட்டு திருத்தத்துடன் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.