நல்லூர் திருவிழா தொடர்பில் ஷவேந்திர சில்வாவுக்கு மஹிந்த போட்டுள்ள உத்தரவு
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் அவருக்கு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக, அதிகளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவில் வழக்கமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் நிலையில், இம்முறை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதிகமானோர் பங்கேற்க முடியாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்து குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் குறைந்தளவிலாவது பக்தர்களை ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என, பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த கோரிக்கையினை பரிசீலனை செய்த பிரதமர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவில் பக்கதர்கள் பங்கேற்ற வழிசெய்யுமாறு பணித்துள்ளார்.