19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு

சீனாவின் ஹாங்சோவில் எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவிருந்த 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட்19 தொற்றுநோய் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் தற்போது மீண்டும் கொவிட் தலைத்தூக்கி வருகிறது. இந்நிலையில், போட்டி மீள ஆரம்பிக்கப்படும் திகதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆசியாவின் ஒலிம்பிக்' என வர்ணிக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 செப்டம்பர் 10 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை சீனாவின் ஹாங்சோ (Hangzhou) நகரில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமான ஹாங்சோ, சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷங்காய் அருகே அமைந்துள்ளது.

வேகமாக பரவி வரும் கொவிட்-19 வைரஸ் காரணமாக ஷங்காய் நகரின் பல பகுதிகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

கிழக்கு சீனாவில் 12 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான ஹாங்சோ, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான 56 அரங்குகளை ஏற்கனவே கட்டி முடித்துள்ளதாக கடந்த மாதம் அமைப்பாளர்கள் அறிவித்தனர்.

1990 இல் பீஜிங் மற்றும் 2010 இல் குவாங்சோவுக்குப் பிறகு ஒரு கண்ட மட்டப் போட்டியை நடத்தும் சீனாவின் மூன்றாவது நகரம் ஹாங்சோ ஆகும்