பாதுகாப்பற்ற கட்டடத்தில் நிறுவனங்கள் – உயிராபத்துக்கள் ஏற்பட கூடிய ஏதுவான காரணிகளும் உண்டு!
யாழ்.நகர் மத்தியில் உள்ள தனியார் நிதி நிறுவன மின்னினைப்பில் தீ விபத்து ஏற்பட அதிக மின் நுகர்வே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.நகர் மத்தியிலுள்ள சத்திர சந்திக்கு அருகில் உள்ள நிதி நிறுவனத்தின் மின் இணைப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டு இருந்தது. நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தீயினை அணைத்தனர்.
அது தொடர்பில் மின்சார சபைக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு சென்ற மின்சார சபையினர் மின் இணைப்பை சீர் செய்து சென்றனர்.
குறித்த கட்டடத்தில் தனியார் வங்கிகள் இரண்டு, தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனம் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அவைக்கு அதிகளவான மின்சாரம் தேவைப்படுகின்றன. சாதாரணமாக 60A (அம்பியஸ்) மின் இணைப்பு ஒன்றே வழங்க முடியும். அதற்கு மேலதிகமாக மின்சாரம் தேவை என்றால் மின் மாற்றி (ரான்ஸ்போமர்) பொருத்த வேண்டும்.
மின் மாற்றி ஒன்றினை தனியார் கட்டடம் ஒன்றுக்கு பொருத்துவதாயின் கட்டட உரிமையாளரே அதற்கான பெறுமதியை மின்சார சபைக்கு செலுத்த வேண்டும். அதற்கான செலவீனம் சுமார் 7 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையில் வரலாம். அதனால் மின் மாற்றி பொருத்தப்படாமல் மின்சாரம் பெறப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த கட்டத்தின் மேல் தளத்தில் தனியார் கல்வி நிறுவனம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் மேல் தளத்திற்கு வந்து செல்வார்கள்.
அந்நிலையில் கட்டடத்திற்கான படிக்கட்டுகள் மிக ஒடுங்கிய நிலையில் உள்ளன. அவசரமாக வெளியேறுவதற்கு உரிய மாற்று வழிகள் கட்டடத்தில் இல்லை. படிக்கட்டு அமைந்துள்ள பகுதியையே கட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் பிரதான மின் இணைப்பு காணப்படுகின்றன.
நேற்றைய தினம் படிக்கட்டுக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டது. அதன் போது மேல் தளங்களில் 150க்கும் அதிகமானோர் நிறுவனங்களில் கடமையில் இருந்துள்ளனர். தீ பரவல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்காவிடின், பாரிய விளைவுகளை தீ ஏற்பட்டுத்தி இருக்கும்.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்கு உள்ளாகி முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் யாழில் மோசமான தீ விபத்து ஏற்பட்டால் அதனை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமான செயலாகும்.
எனவே குறித்த கட்டடத்தின் தரம் குறித்தும் கட்டடத்திற்கு வழங்கப்படும் மின் இணைப்புக்கள் குறித்தும் உரிய தரப்புக்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.