வெளியாகிறது அதி விசேட வர்த்தமானி!

வெளியாகிறது அதி விசேட வர்த்தமானி!

அடுத்த இரண்டு தினங்களுக்குள் பொதுத் தேர்தல் சம்பந்தமான சுகாதார வழிக்காட்டல்கள் உடனடியாக வர்த்தமானியில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் ஊடகங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சுகாதார வழிக்காட்டல்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு சட்டமாக்கப்படவில்லை என்றால், தேர்தலை நடத்துவது சிரமம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

தபால் மூலம் வாக்களிக்கும் அரச அதிகாரிகளே சுகாதார வழிக்காட்டல்களை சரியான பின்பற்றுதில்லை என்பதால், சாதாரண மக்களிடம் அதனை எவ்வாறு எதிர்பார்ப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

சுகாதார வழிக்காட்டல்களை வர்த்தமானியில் வெளியிட்டு சட்டமாக்கினால், அதனை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆணைக்குழு கூடுவது சம்பந்தமாக மீளாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.