பிக்பாஷ் லீக் - சிட்னியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த்

பிக்பாஷ் லீக் - சிட்னியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெர்த்

பிக்பாஷ் லீக் தொடரில் நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் சிட்னி தண்டர் மற்றும் அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிக்பாஷ் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் தகுதிச்சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெர்த் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஷ் இங்லிஸ் 79 ரன்னும், குர்திஸ் பாட்டர்சன் 64 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது. பெர்த் அணியினரின் பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் பென் டுவார்சிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 29 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 66 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை. இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பெர்த் அணி சார்பில் ஜே ரிச்சர்ட்சன், ஜெசன் பெஹ்ரண்டாப், ஆஷ்டன் ஆகர் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் பெர்த் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெர்த் அணியின் ஜோஷ் இங்லிஸ் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.