லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கமளிப்பு

லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கமளிப்பு

SLSI தரத்திற்கு அமையவே உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் அது சிலிண்டரில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு இன்று (15) வரை கால அவகாசம் வழங்கி இருந்தது.

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு நேற்று (14) அழைக்கப்பட்ட போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டது

ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எரிவாயு சிலிண்டரின் கலவை, அந்த கலவை சிலிண்டரில் தென்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் தற்போது சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதா என நீதிபதிகள் குழாம் இதன்போது பிரதிவாதிகளிடம் வினவியிருந்தனர்.

இதன்போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசூரிய, இந்த விடயம் தொடர்பாக தனது கட்சிக்காரரிடம் கேட்டறிந்து சமர்ப்பணங்களை முன்வைக்க இன்று வரை கால அவகாசம் பெற்றுத்தருமாறு நீதிமன்றில் கோரியிருந்தார். அதன்படி, இன்று தனது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்த போது லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.