வத்தளை - ப்ரீத்திபுர கடலில் காணாமல்போயிருந்த இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்பு!
வத்தளை - ப்ரீத்திபுர கடலில் நீராடச் சென்று காணாமல்போன இரண்டு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் இன்று (13) காலை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வத்தளை ப்ரீத்திபுர கடற்கரைக்கு நேற்று (12) மாலை பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் சென்றுள்ளனர்.
அவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் அவர்களில் இருவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன மாணவர்களை தேடும் நடவடிக்கையில் கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டிருந்த நிலையில் இரு மாணவர்களும் சடலங்களாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.
வத்தளை - எண்டேரமுல்ல பகுதியைச் சேர்ந்த கே.கே. ருவிந்த புன்சர (15) மற்றும் எம். சஞ்சித சந்தகெலும் (15) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.