ஷ்ரேயாஸ் அய்யர், சகா அபாரம்: இந்தியா 234/7 டிக்ளேர்- நியூசிலாந்துக்கு 284 ரன் இலக்கு

ஷ்ரேயாஸ் அய்யர், சகா அபாரம்: இந்தியா 234/7 டிக்ளேர்- நியூசிலாந்துக்கு 284 ரன் இலக்கு

இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட ஷ்ரேயாஸ் அய்யர், சகா அரைசதங்கள் விளாச நியூசிலாந்துக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.

 

49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கினர். 

 

புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையிலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இந்தியா 51 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

 

 

6-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களுடனும், அஸ்வின் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

உணவு இடைவேளை முடிந்த பின்னர் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர். அஸ்வின் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.

 

ஷ்ரேயாஸ் அய்யர்

 

7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் சகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. ஷ்ரேயாஸ் அய்யர் 65 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சகா அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்தியா 81 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்திருக்கும்போது, 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

 

அப்போது சகா 126 பந்தில் 61 ரன்கள் எடுத்தும், அக்சார் பட்டேல் 67 பந்தில் 28 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர். டிம் சவுத்தி, ஜேசின் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

 

தற்போது இந்தியா 283 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.