வடமாகாணத்தில் கொரோனா அச்சம்? வைத்தியர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்
வடமாகாணத்தில் கொரோனா பரம்வல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆயினும் கொரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கூறுகையில்,
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை சார்ந்த 2 பேரை கடந்த ஜூலை மாதம் 4ம் திகதி சந்திப்பதற்காக 3 குடும்பங்களைச் சார்ந்த உறவினர்கள் கந்தக்காடு முகாமிற்கு சென்றிருந்தனர்.
இந்த 3 குடும்பங்களையும் சேர்ந்த 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்களில் 9 மாத குழந்தை ஒன்றிற்கு காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதனால் அந்தக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்தக் குழந்தைக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நெடுந்தீவில் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி தரையிறங்கிய அகதி ஒருவர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
அவர் வருகை தந்ததிலிருந்து 2ம், 9ம் நாள்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக காங்கேசன்துறையில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி வருகைதந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இவர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும். அவசியமின்றி பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளவும்.
அவசியமற்ற பொது நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும் கேட்டுக்கொள்கிறோம். என்றார்.