குறிஞ்சாக்கேணி படகு விபத்து - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

குறிஞ்சாக்கேணி படகு விபத்து - சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஐ.பி.ரஸாக் நேற்று (24) உத்தரவிட்டார்.

பெரிய கிண்ணியா, பெரியாற்றுமுனை, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 40, 35 மற்றும் 53 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த மிதப்புப் பாதையை இயக்கிய இருவரையும், பாதையின் உரிமையாளர் ஒருவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் செவ்வாய்கிழமை (23) மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த கிண்ணியா பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இருவரையும் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.