நான் பெண் தான், என்னை ஆண் என கூறியவர்கள் மீது வழக்கு தொடருவேன் - ஈரான் வீராங்கனை

நான் பெண் தான், என்னை ஆண் என கூறியவர்கள் மீது வழக்கு தொடருவேன் - ஈரான் வீராங்கனை

ஈரான் பெண்கள் கால்பந்து அணி மீது முந்தைய காலங்களில் இருந்தே பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த பெண்கள் ஆசிய கால்பந்து கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில் ஜோர்டான் அணியை வீழ்த்தி ஈரான் பெண்கள் கால்பந்து அணி முதல் முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது.

 

இந்த போட்டியில் ஈரான் அணி பெனால்டி ஷூட் அவுட்டில் ஜோர்டானை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அந்த போட்டியில் ஈரான் அணியின் தூணாக விளங்கி அணிக்கு வெற்றித்தேடி கொடுத்தவர் கோல் கீப்பர் சோஹ்ரே கவுடேய். 

 

 

தற்போது  ஜோர்டான் கால்பந்து சங்கம், ஈரானிய மகளிர் அணியின் கோல் கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது அதிகாரபூர்வ பாலின சரிபார்ப்பு சோதனைக்கான விசாரணையைத் தொடங்குமாறு ஆசிய கால்பந்து கூட்டமைப்பிடம்  கேட்டுக்கொண்டுள்ளது.

 

இது குறித்து ஜோர்டான் கால்பந்து சங்கத்தலைவர் அலி பின் ஹுசைன் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது:

 

ஈரான் பெண்கள் கால்பந்து அணி மீது முந்தைய காலங்களில் இருந்தே பாலின மற்றும் ஊக்கமருந்து பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. அதனால் சோஹ்ரே கவுடேய் மீதும் மற்ற வீராங்கனைகள் மீதும் "பாலின சரிபார்ப்பு சோதனை"  நடத்துமாறும்  இந்த சோதனை சுதந்திரமான மருத்துவ குழுவால் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இதற்கு பதில்  அளித்து பேசியுள்ள சோஹ்ரே கவுடேய் "நான் ஒரு பெண். இந்த குற்றச்சாட்டு கொடுமையானது. ஜோர்டான்  கால்பந்து சங்கம் மீது நான் வழக்குத் தொடருவேன் " எனத் தெரிவித்துள்ளார்.