டிரைவருக்கு கொரோனா: குடும்பத்துடன் பரிசோதனை செய்து கொண்ட தனுஷ் பட நடிகை
பாலிவுட் திரையுலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய நால்வரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் பாலிவுட் குணசித்திர நடிகர் அனுபம்கெர் குடும்பத்தினர் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் நடிகை ரேகாவின் வீட்டின் செக்யூரிட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தால் அவரது வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் இளம் நடிகையான சாரா அலிகான் தனது குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். சாரா அலிகானின் டிரைவருக்கு கொரனோ தொற்று உறுதியானதை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் பரிசோதனை செய்து கொண்டதாகவும் ஆனால் தங்கள் குடும்பத்திலுள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் டிரைவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் சாரா அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகை சாரா அலிகான் தற்போது அக்சயகுமார் மற்றும் தனுஷ் இணைந்து நடித்து வரும் ’அட்ரங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி வருகிறார் என்பதும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.